பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தி 60 நீதிபதிகளை சிறையில் அடைத்ததாக முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் 2 நாள் போலீஸ் காவலில் இருந்த அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை மே 4–ந் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அப்போது முஷரப் சார்பில் ஆஜரான வக்கீல் கமார் அப்சால் வாதிடுகையில், ‘போலீஸ் விசாரணைக்கு முஷரப் முழு ஒத்துழைப்பு வழங்குகிறார். எனவே அவரை மேலும் போலீஸ் நிலைய காவலுக்கு அனுப்பி வைத்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று குறிப்பிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அதுபற்றி உள்ளூர் நிர்வாகம் தீர்மானிக்க யோசனை தெரிவித்தார்.
இதனை அடுத்து 5 ஏக்கர் பரப்பளவிலுள்ள முஷரப்பின் பண்ணை வீட்டில் பாதுகாப்பு கோபுரம் உள்ளிட்ட பலவசதிகள் இருப்பதால் அதையே கிளை சிறையாக ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்தனர். பின்னர் முஷரப், அவருடைய பண்ணை வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டு பலத்த பாதுகாப்புடன் காவலில் வைக்கப்பட்டார். இந்த பண்ணை வீடு நீச்சல் குளம் உள்பட நவீன வசதி கொண்டதாகும். இந்த பண்ணை வீடு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், அவரை சந்திக்க முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதற்கிடையில் வழக்குக்கு எதிராக தாக்கல் செய்துள்ள முஷரப் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Post a Comment