கடந்த மாதமே மின் கட்டணம் அதிரகரிக்கப்பட்டுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க அதிர்ச்சி தகவல்






இம்மாதம் 26ஆம் திகதி தொடக்கம் புதிய மின் கட்டணம் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை தெரிவித்தது. எனினும் கடந்த மார்ச் மாதத்துக்கான கட்டணத்தில் இந்த கட்டண உயர்வு அறவிடப்பட்டுள்ளது. எனது வீட்டுக்கு சாதாரணமாக மாதம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாவே மின்கட்டணமாக வரும். ஆனால் கடந்த மாரச் மாதத்துக்கு 18 ஆயிரத்து 288 ரூபா மின் கட்டணமாக வந்துள்ளது. இது எவ்விதத்தில் நியாயம் என என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அக் கட்சியின் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்ளவியெழுப்பினார்.

ராஜகிரியவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எவ்வித காரணங்களும் இன்றி மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி சிறுபிள்ளைத் தனமான பதில்களை கூறிவருகின்றார். இப்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்துக்கு இப்போது தீர்வு காணாமல் அடுத்த வருடம் பெப்பரவரி மாதத்தில் மானியமுறை வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த மின்கட்டண உயர்வை மறக்கும் வரை இவ்வாறான கற்பனைக் கதைகளை கூறி வருகின்றார். இதன் மூலம் மக்களை எவ்வாறு ஏமாற்றுகின்றார் என புலப்படுகின்றது. மக்கள் தற்போது வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாமல் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். இப்போது மக்களுக்கு சலுகைகள் வழங்காது அடுத்த வருடம் சலுகைகள் வழங்குவதாக கூறுகின்றார். அதாவது எதிர்காலத்தில் சலுகைகள் வழங்கப்படும் என கற்பனை கதைகளை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

இதேவேளை இம்மாதம் 26 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்கட்டணம் எவ்வித அடிப்படையும் இல்லாமல் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் எந்த முன் அறிவித்தலும் இன்றி கடந்த மாதத்துக்கும் இந்த மின் கட்டணம் அறவிடப்பட்டுள்ளது. இதனை யாரை கேட்டு செய்தீர்கள்? பொதுமக்களுக்கு ஒன்றைக் கூறிவிட்டு இவ்வாறான நடவடிக்கையை எவ்வாறு செய்யமுடியும். இதனால் சாதாரண பொதுமக்களே பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள வருமான இழப்புகளை ஈடுசெய்வதற்காகவே தற்காலிகமாக இந்த மின் கட்டண உயர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. நல்லவேளை நாட்டில் எந்தவொரு நீர்த்தேக்கங்களும் உடைந்தோ அல்லது நீர்வற்றியோ காணப்படவில்லை. இல்லாவிட்டால் அதனையும் அரசாங்கம் மின் கட்டண உயர்வுக்கு காரணம் காட்டிருக்கும்.

இது இவ்வாறிருக்க கொழும்பில் லம்போகினி கார் பந்தய போட்டி நடத்தப்பட்டது. இதற்கு பல மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன. காரணம் ஜனாதிபதியின் மகன் இதில் பங்கேற்றார். ஜனாதிபதி மகன் என்றால் மின்சாரம் இலவசமா? அதுவும் வீண்விரயம் ஆகாதா? இதனை ஏன் பொதுமக்களுக்கு வழங்க முடியாது.


மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு சாதாரணமான விடயமொன்று என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார். இவரைப்போன்ற அமைச்சர்களுக்கு இது சாதாரண விடயம்தான். காரணம் அரசாங்கம் தானே இவர்களுடைய மின் கட்டணத்தை செலுத்துகின்றது. ஆகவே இவ்வாறுதான் கூறுவார். பாதிக்கப்படுவது சாதாரண பொதுமக்கள் என்பதை உணரமாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger