அ.தி.மு.க. 44 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று 37 இடங்களில் வெற்றி வாகை சூடியது எப்படி என்று எழுதுவதும் 35 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாததுடன் 9 தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்குப் போனது குறித்து எழுதுவதும் ஒன்றுதான்!
தி.மு.க.வின் மரண அடிக்கும் அ.தி.மு.க. வின் அமோக வெற்றிக்கும் காரணிகளாக விளங்கியது முக்கியமான நான்கு காரணிகள். அவை பற்றி விலாவாரியாகப் பார்ப்போம்…..
யார் வர வேண்டும் என்பதில்கூட வேறுபாடு இருக்கலாம் ஆனால், யார் வரக்கூடாது என்பதில் ஒருமித்த எண்ணம் இந்தியா முழுவதும் மேலோங்கி இருந்தது. அதுதான் காங்கிரஸை வேரோடு சாய்த்திருக்கிறது. காங்கிரஸ் எதிர்ப்பலைதான் மோடியை சூறாவளியாக மாற்றியது என்றால் தமிழ் நாட்டிலும் காங்கிரஸ் எதிர்ப்பலைதான் அ.தி.மு.க.வின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.
காங்கிரஸுக்கு எதிர்ப்பலை இருக்கிறது. அக்கட்சியுடன் சேர்ந்தால் போணியாக முடியாது என்பதால் தான் தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறியது. தேர்தலுக்காக கூட்டணி வைக்க வேண்டும் என்று சோனியா, ராகுல் உள்ளிட்டோரும் ஆசைப்பட்ட பிறகும் தி.மு.க. ஒதுங்கியது. ஆனால், தி.மு.க.வை மக்கள் நம்பத் தயாராக இல்லை. காங்கிரஸின் பி.டீம் போலவே தான் தி.மு.க.வும் இருக்கிறது என்றே மக்கள் நம்பினர்.
அதற்குக் காரணம் காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகும் கனிமொழியின் ராஜ்ய சபா சீட்டுக்காக ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவினை தி.மு.க. கோரியது. ஆகவே, காங்கிரஸுடன் இரகசிய கூட்டணியை தி.மு.க. வைத்திருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சான்றாகும்.
இந்தியாவில் நடந்த தேர்தலோ காங்கிரஸா? பா.ஜ.க.வா? என்ற அடிப்படையில் தான் போய்க் கொண்டிருந்தது.
ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியோ இடையில் ஒரு புதிய குழப்பத்தை தேர்தல் பிரசாரத்தில் ஏற்படுத்தினார். மத்தியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியை அவரால் விமர்சிக்கவும் முடியவில்லை. மத்தியில் எந்த ஆட்சி அமையும் என்ற பேச்சு வரும் போதெல்லாம் மதச்சார்பற்ற ஆட்சி அமைப்போம் என்று பேசத் தொடங்கினார். அது காங்கிரஸுக்குத்தான் ஆதரவு என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
அது மட்டுமல்ல. கலைஞர் டி.வி.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியதுமே நடந்த தவறுகளை ஒப்புக்கொண்டால் காங்கிரஸுக்கு பொது மன்னிப்பு வழங்குவோம் என்று பல்டி அடித்தார். அடுத்து அமுலாக்கப்பிரிவு நோட்டீஸ் வந்ததும் இன்னொரு கூட்டத்தில் கை கொடுப்போம் என்று சந்தேக பாஷையில் பேசினார். ஆகவே, காங்கிரஸை விட்டால் தி.மு.க.வுக்கு வேறு வழியில்லை என்ற தோற்றத்தையே கருணாநிதி ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
மூன்றாவது அணிக்கும் இவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தி.மு.க.வுக்கு ஓட்டுப் போடுவது காங்கிரஸுக்கு ஓட்டுப்போடுவதற்கு சமம் என்றே மக்கள் கருதி தி.மு.க.வை புறக்கணித்தார்கள்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வலியுறுத்தி இருக்கிறது என்றால் அது கூட்டணிக்கு இடமில்லை என்று மக்கள் எடுத்த முடிவுதான். மத்தியில் கூட்டணி என்ற பெயரில் மாநிலக் கட்சிகள் பதவிக்காக மிரட்டிய சாட்சிகளையும் அடித்த கொள்ளையையும் மக்கள் மறக்கவில்லை.
தமிழ் நாட்டில் எந்தக் கட்சிக்கும் இல்லாத துணிச்சல் தனியாக நிற்பது என்பது. அதைச் செய்து காட்டிய அ.தி.மு.க.வை மக்கள் வரவேற்று ஓட்டுப்போட்டது தான் 44 சதவிகிதத்தைத் தொட்டிருக்கிறது. இங்கே தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணியையும் பா.ஜ.க. தலைமையில் அமைந்த கூட்டணியையும் மக்கள் விரும்பவேயில்லை.
குறிப்பாக கூட்டணி என்று வந்துவிட்டால் மத்தியிலோ, மாநிலத்திலோ ஆளும் கட்சியை ஆட்டிப்படைக்கும் குட்டிச்சாத்தான்கள் போலவே கூட்டணிக் கட்சிகள் நடந்து கொள்கின்றன. தேர்தலுக்கு முன்பே கூட்டணிக்குள் குடைச்சல் தரும் கட்சிகளில் பா.ம.க.வின் செயல்பாடும் தே.மு.தி.க. வின் செயல்பாடும் மக்களை கடும் எரிச்சலுக்கு உள்ளாக்கி இருந்தது. கூட்டணி என்ற பெயரில் ஆட்சியில் இவர்கள் சேர்ந்தால் என்னவெல்லாம் கூத்துக்கள் அரங்கேறுமோ என்ற எண்ணம் மேலோங்கியதால் தான் அ.தி.மு.க.வுக்கு அறுவடைத் திருநாளாக மே 16 அமைந்தது.
குடும்ப அரசியலுக்கும் இந்தத் தேர்தலில் ஓங்கி ஓர் அடி விழுந்திருப்பதைக் காணவே முடிகிறது. சோனியா குடும்பம் மீதான வெறுப்பு இந்தியா முழுவதும் பரவிக் கிடந்தது. இது காஷ்மீரிலும் பீகாரிலும் சென்னையிலும் வெளிப்பட்டது.
குடும்ப அரசியல் கூடாது என்று சொல்லிக்கொண்ட ஸ்டாலின், அழகிரியை கட்சியில் இருந்து வெளியேற்றினார். கனிமொழியை ஓரம் கட்டினார். அவரே எல்லா முடிவுகளையும் எடுத்தார். ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையிலும் திருச்சி மாநாடு விஷயத்திலும் அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தை கட்சியினரே விரும்பவில்லை. மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு மூன்றாவது முறையும் சீட் கொடுத்ததை மக்கள் வரவேற்கவில்லை. ஆகவே, குடும்ப அரசியலை இத்துடன் ஓரங்கட்டி வைக்க வேண்டிய நிலைக்கு தி.மு.க. தள்ளப்பட்டிருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட மூன்று காரணிகளைத் தவிர்த்து அ.தி.மு.க.வின் அசுரத்தனமான வேலைதான் தி.மு.க.வை வாரிச் சுருட்டியது. தேர்தல் பணி என்றாலே தி.மு.க.வின் வைர வரிகளான கொண்டு வா என்றால் வெட்டி வரும் வீரர்கள் என்று மேடைகளில் ஒலிப்பதுண்டு. ஆனால் கடந்த இரு தேர்தல்களாகவே தி.மு.க.வின் தேர்தல் பணிகளில் பெரும் சுணக்கம்.
2014 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க.வினர் உழைக்க ஆரம்பித்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் இது நம்பவே முடியாததுதான். ஆனால் அ.தி.மு.க.வின் தேர்தல் பிரிவு ஒன்றரை வருடத்துக்கு முன்பாகவே எம்.பி.தேர்தலை நோக்கி பயணத்தைத் தொடங்கிவிட்டது. அக்கட்சியின் முதல் பூத் கமிட்டிக் கூட்டமே 2013 ஜனவரியில் தொடங்கியது.
ஊர் ஊராக மாவட்ட அமைச்சர்கள் பூத் கமிட்டி கூட்டத்தைக் கூட்டி எம்.பி. தேர்தலுக்கான பணிகள் என்று பணியாற்றத் தொடங்கினர். கட்சிக்காரர்களுக்கே ஒன்றும் புரியவில்லை. ஏன் இந்த அவசரம்? யாருடன் கூட்டணி என்று முடிவாகாமலே எப்படி வேலை செய்வது என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அ.தி.மு.க. வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவோ அப்போதே எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்பதைத் தெளிவாகக் கொண்டிருந்தார்.

Post a Comment