வெளிநாட்டு ஊடகங்கள் தங்களது அரசுக்கு எதிராகவும், முன்னாள் அதிபர் முகமது மோர்சிக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதாக எகிப்து அரசு குற்றம்சாட்டி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அங்கு நடந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளை சேகரிக்க சென்ற சில வெளிநாட்டு நிருபர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.
இவர்களில் பலர் கடந்த 17-ம் தேதி விடுதலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சியிருந்த 3 நிருபர்கள் மீது நடைபெற்ற விசாரணையில் நேற்று அவர்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்தப் பத்திரிகையாளர்களில் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் பீட்டர் கிரெஸ்டேவும் இருப்பதால் இந்தத் தீர்ப்பு உலகெங்கும் கோபத்தையும், ஊடக அடக்குமுறை எகிப்தில் வளர்ந்துவருவதான ஒரு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தண்டனை வழங்கப்பட்டுள்ள மூன்று பேரில் கிரெஸ்டேவிற்கும், எகிப்து- கனடா நாட்டவரான முகமது படேல் பாமிக்கும் தலா ஏழு வருட தண்டனையும், எகிப்திய தயாரிப்பாளரான பஹேர் முகமதுவிற்கு ஏழு மற்றும் மூன்றாண்டு சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராகாத பதினோரு பேர் மீதும் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு உதவுவதாகவும் குறிப்பிடப்பட்ட இவர்களில் இரண்டு பிரிட்டிஷார் மற்றும் ஒரு டச்சு பத்திரிகையாளர் உட்பட அனைவருக்கும் பத்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு அதிர்ச்சியை அளித்துள்ளதாக ஆஸ்திரேலியா குறிப்பிட, உறையவைக்கும் ஒரு கடுமையான தண்டனை என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியுள்ளார். எகிப்து அதிபரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ள அமெரிக்க அரசு பத்திரிகையாளர்களை விடுதலை செய்யும்படி குறிப்பிட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காகவே இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிவதாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப் கூறியதுடன் அதிபர் சிசியை இதில் தலையிடுமாறு கோரியுள்ளார்.
புதிய எகிப்திய அரசாங்கம் ஜனநாயகத்தின் பாதையை நோக்கி நடைபெறுவதை உலகுக்கு உணர்த்த வைக்கும் ஒரு வாய்ப்பு இதுவாகும். ஜனநாயகத்தின் இரண்டு தூண்களாக விளங்கும் பேச்சு சுதந்திரத்தையும், பத்திரிகை சுதந்திரத்தையும் எகிப்து அரசு மதிப்பதை பத்திரிகையாளர்களை விடுவிப்பதன்மூலம் அரசு நிரூபணம் செய்ய வேண்டும் என்று ஜூலி குறிப்பிட்டுள்ளார்

Post a Comment