ஆசியாக் கண்டத்தில் உள்ள 14 நாடுகளில் பெண்கள் வேலை பார்ப்பதில் முன்னிலை வகிப்பவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஆகும். இவற்றை தொடர்ந்து தற்போது, தைவான் நாட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
ஆயினும், பாரம்பரிய எதிர்பார்ப்புகளான திருமணம், குழந்தைப் பேறு மற்றும் வேலைப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தங்கள் போன்றவற்றால் இந்தப் பெண்களும் தடுமாறுகின்றனர்.
தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையினால் வேலைப் பாதுகாப்பு என்பதுவே பெண்களிடத்தில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இதனால், 1980களில் 24 என்றிருந்த திருமண வயதினை பெண்கள் 30 என்று தள்ளிப்போட்டுள்ளனர். அதேபோல், பிற்காலத்தில் குழந்தைபேறு ஏற்பட வேண்டி, இப்போதே தங்களின் கரு முட்டைகளை இதற்கென செயல்பட்டு வரும் மையங்களில் சேமிக்க ஆரம்பித்துள்ளனர்.
34 வயதாகும் லின் கியோவிற்கு அமைந்துள்ள நல்ல வேலையினால் அவர் வீட்டிலிருந்தபடியே பணி புரியும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை இழக்க விரும்பாமல் அவர் தனது திருமணத்தைத் தள்ளிப் போட்டுள்ளார். ஆயினும், காலம் கடந்தபின் மணமுடித்து குழந்தை பேறு வேண்டும்போது பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னரே தனது கரு முட்டையை சேமித்துள்ளார். இது, பிற்காலத்தில் தான் வேண்டும்போது தனக்குக் குழந்தைப் பேற்றிற்கு உதவும் என்று அவர் கருதுகின்றார்.
இது போன்றதொரு மையத்தை நடத்தி வரும் லெய் சிங் ஹுவா, காலதாமதமாக நடைபெறும் திருமணத்தால் பிரச்சினை வரும்போது இம்மாதிரி கரு முட்டைகளை சேமித்து வைத்திருந்தால், அவர்கள் கரு முட்டை தானத்திற்கு காத்திருக்க வேண்டியதில்லை என்றார்.
நான்கு வருடங்களுக்கு முன்னால், ஒரு வருடத்திற்கு இருபது பேர் கருமுட்டைகளை சேமித்த நிலை மறைந்து தற்போது இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள்ளாகவே 40 பேருக்கு தாங்கள் இந்த சேவையை செய்துள்ளதாக லெய் சிங் ஹுவா தெரிவிக்கின்றார்.

Post a Comment