சிரியா அரசுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்திருக்க, ஆயுத விற்பனை செய்ததை ‘ராஜதந்திர வார்த்தைகளில்’ மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது ரஷ்யா.ரஷ்யாவின் இந்த டபுள்-கேம், அமெரிக்காவையும் பிரிட்டனையும் கொதிக்க வைத்துள்ளது!என்ன சொல்கிறது ரஷ்யா? ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ், “மாஸ்கோவின் ஆயுத விற்பனை, சிரியா பகுதியில் உள்ள ராணுவ சமநிலை குலையாதபடி, மிகக் கவனமாக செய்யப்பட்டுள்ளதால், நாம் எந்த கட்டுப்பாட்டையும் மீறவில்லை” என்றார்.
சிரியாவுக்கு விற்றோம் என்றும் சொல்லவில்லை. விற்கவில்லை என்றும் சொல்லவில்லை. விற்றிருந்தால், அல்லது விற்கும் திட்டம் இருந்தால், என்ன ரக ஆயுதங்கள் என்றும் சொல்லவில்லை.ஆனால், ரஷ்யா என்ன ஆயுதங்களை சிரியாவுக்கு விற்றது என்று பென்டகன் புட்டுப் புட்டு வைக்கிறது.கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளையே ரஷ்யா விற்பனை செய்திருக்கிறது. அதுவும், இந்த ஏவுகணைகள் யக்ஹொன்ட் ரக ஏவுகணைகள் என்கிறார்கள். (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும்) ரஷ்ய தயாரிப்பு யக்ஹொன்ட் ரக ஏவுகணைகளில், advanced guidance system உள்ளது என்பதுதான், அமெரிக்காவும், பிரிட்டனும் கொதிப்பதன் காரணம்.
இது உண்மையிலேயே பெரிய ராஜதந்திர விளையாட்டுதான்! எப்படியென்று சொல்கிறோம், பாருங்கள். சிரியா அரசு, அங்கு யுத்தம் புரியும் போராளிப் படையினர்மீது தாக்குதல் நடத்த ஆயுத விற்பனை செய்யக்கூடாது என்பதே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை. இதைப் பிடித்து வைத்துள்ளது ரஷ்யா.அதாவது, போராளிப் படையினர் ராணுவத்துக்கு எதிராக தரையில் யுத்தம் புரிகிறார்கள். அவர்களிடம் கப்பல் ஏதுமில்லை. கப்பல்களை தாக்கும் ஏவுகணைகளையே ரஷ்யா விற்பனை செய்திருப்பதால், “சிரியா பகுதியில் உள்ள ராணுவ சமநிலை குலையாதபடி..” என்கிறது ரஷ்யா.
டெக்னிக்கலாக பார்த்தால், அவர்கள் சொல்வது சரி. இந்த ஏவுகணைகளை தரையில் போர்புரியும் போராளி குழுக்கள் மீது ஏவ முடியாது!அப்படியானால், சிரியா எதற்காக அவற்றை வாங்குகிறது?நாளைக்கே சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேலை நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்த முடிவு செய்தால் (அநேகமாக தாக்குவார்கள்), அமெரிக்க பிரிட்டிஷ் கடற்படை கப்பல்கள் சிரியாவை நோக்கி செல்லும்!அவற்றுக்கு எமனாக வரப்போகின்றன ரஷ்ய தயாரிப்பு யக்ஹொன்ட் ரக ஏவுகணைகள்! இப்போது புரிகிறதா கதைச் சுருக்கம்?

Post a Comment