வடக்கு, கிழக்குத் தமிழர்கள் ஒரு தேர்தலில் பொன்னம்பலத்தை தோற்கடித்து கொப்பேக்கடுவவை வெற்றி பெறச் செய்தவர்கள் என்றுதெரிவித்திருக்கிறார் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலையே அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தன வெற்றி பெற்று ஜனாதிபதியானார். சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹெக்டர் கொப்பேக்கடுவ தோல்வியடைந்தார்.
இதே தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ரோஹண விஜேவீர, கொல்வின் ஆர். டி. சில்வா, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் போட்டியிட்டனர்.
குமார் பொன்னம்பலம் நான்காவது இடத்தைப் பிடித்தார். ரோஹண மூன்றாம் இடத்தைப் பிடித்தார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இருந்த 11 தொகுதிகளில் காங்கேசன்துறை, மானிப்பாய், கோப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை ஆகிய 5 தொகுதிகளில் கொப்பேக்கடுவ வெற்றி பெற்றிருந்தார்.
ஏனைய 6 தொகுதிகளிலும் பொன்னம்பலம் வெற்றார். வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்த மூன்று தொகுதிகளில் வவுனியா மற்றும் மன்னார் தொகுதிகளில் அவர் பொன்னம்பலத்தைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் அந்த இரு தொகுதிகளிலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவே வென்றிருந்தார்.
மட்டக்களப்புத் தேர்தல் மாவட்டத்தில் இருந்த மூன்று தொகுதிகளில் கல்குடா தொகுதியில் பொன்னம்பலத்தைவிட கொப்பேக்கடுவ அதிக வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால் இங்கும் ஜே.ஆர். வெற்றிபெற்றார். ஏனைய இரு தொகுதிகளான மட்டக்களப்பு மற்றும் பட்டிருப்பில் குமார் கொப்பேகடுவவைவிட அதிக வாக்குகள் பெற்றார்.
அதிலும் பட்டிருப்பில் அதிக வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்த 3 தொகுதிகளிலும் கொப்பேக்கடுவ பொன்னம்பலத்தைவிட அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார். எனினும் சேருவல, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஜே.ஆர். வென்றார்.
அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் இருந்த 4 தொகுதிகளிலும் குமார் பொன்னம்பலத்தைவிட கொப்பேகடுவ அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.
அம்பாறை தொகுதியில் மட்டும் வென்றிருந்தார். ஏனையவற்றை ஜே.ஆர். கைப்பற்றினார்.
எனினும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் வீழ்ந்த வாக்குகளின் அடிப்படையில் கொப்பேக்கடுவவைவிட அவர்கள் குமார் பொன்னம்பலத்துக்கே அதிக வாக்குகளை வழங்கியிருக்கின்றனர் என்று தேர்தல் திணைக்களம் வெளியிட்ட முடிவுகளில் இருந்து தெரிகிறது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய தேர்தல் மாவட்டங்களில் குமார் பொன்னம்பலத்துக்கு மொத்தம் 155,947 வாக்குகளும் ஹெக்டர் கொப்பேக்கடுவவுக்கு 153,909 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன என்கிறது தேர்தல் திணைக்களம் வெளியிட்ட முடிவுகள்.
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில் கொப்பேக்கடுவ பெருமளவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
1982 இற்கான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் : http://onlineuthayan.com/adv/1982.jpg
|
1982 ஜனாதிபதி தேர்தலின் உண்மை நிலை
Labels:
அரசியல் தலைவர்கள்

Post a Comment