இலங்கையில் காமன்வெல்த் மாநாடு அதிர்ச்சியும் கவலையும் தரும் முடிவு: கனடா
கனடிய வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட்
காமன்வெல்த் அமைப்பிலுள்ள நாடுகளுடைய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு இவ்வாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் நடப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் தருகின்ற ஒரு முடிவு என கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட் கூறியுள்ளார்.
காமன்வெல்த் அமைப்பு என்பது அடிப்படையில் சட்டத்தின் மாட்சிமை, ஜனநாயகம், நல்லாட்சி போன்ற விழுமியங்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பு என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட கனடிய அமைச்சர், இந்த விழுமியங்கள் அனைத்திலுமே இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்று கூறினார்.
இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் போர்க்குற்றங்கள் நடந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்களும் மற்றும் அதிகரித்துவரும் தடயங்களும் கிடைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சென்ற மாதம் ஐநா மனித உரிமைகள் மன்றமும் இலங்கையை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment