பெண்களுக்கு எதிராக கடந்த வருடம் 1398 வன்முறைச் சம்பவங்கள்



பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் முன்னைய காலங்களை விட மிகக் கூடுதலாக கடந்த வருடம் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிராக கடந்த வருடம் 1398 வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ள அதேநேரம், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆகக் கூடுதலான சம்பவங்களும் மன்னார் மாவட்டத்தில் மிகக் குறைவான சம்பவங்களும் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கு மாகாணங்களில் குறைவான சம்பவங்களே பதிவாகியுள்ளன. மன்னார் மாவட்டத்தில் அதனையும்விட குறைவாக 22 சம்பவங்கள் மட்டுமே கடந்த ஆண்டில் இடம் பெற்றுள்ளன. நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற சம்பவங்கள் 1398 தொடர்பில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் , 219 சம்பவங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக முன்வைக்கப்பட்டுள்ளன. இதனைவிட 34 சம்பவங்கள் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், 875 சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டுள்ளதுடன், 229 வன்முறைகள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்கள விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதேவேளை, இடம் பெற்ற 41 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் பூரண விசாரணைகளை நிறைவு செய்ததுடன் தொடர்ந்து 1357 சம்பவங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger