அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்
அல்லாஹ்வின் திருப்பெயரால்…
அளுத்கமை மற்றும் பேருவளையை அண்டிய
பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாய் இடம் பெற்ற இனவாதத் தாக்குதலின் விளைவால் பல்லாயிரக்
கணக்கான அன்பர்கள் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளார்கள் என்பது நீங்கள் அறிந்ததே!
அல்லாஹ்வை ரப்பாக ஏற்ற முஸ்லிம்
என்ற ஒரே காரணத்திற்காகவே தவிர வேறு எதற்காகவும் இவர்கள் தாக்கப்படவில்லை என்பதே உண்மை.
சொத்துக்கள் சூரையாடப்பட்டு, வீடுகள்
தீயிட்டு கொழுத்தப்பட்டு, கடைத் தொகுதிகளும் வாகனங்களும் இன்ன பிற பொருட்களும் அழிக்கப்பட்டு,
பெறுமதி வாய்ந்த சில உயிர்கள் பறிக்கப்பட்டு முழுமையான இனச் சுத்திகரிப்புக்கு இவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
செழிப்பான செல்வந்தர் கூட அனைத்தையும்
இழந்து நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. தங்குவதற்கு ஓர் இடம் இல்லாமல்
பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்கள் படும் அவஸ்தை கொஞ்சம்
நஞ்சமல்ல!
உடுத்த மாற்று ஆடை இல்லை. உண்ண
முறையான உணவு இல்லை. பச்சிளம் பாலகர்களின் பசி தீர்க்க பால் மா இல்லை. மானத்தை மறைக்க
போதிய ஆடை இல்லை. தாகம் தீர்க்க சுத்தமான குடிநீர் கூட இல்லை. குளிரையும் உஷ்னத்தையும்
தாங்கிக் கொள்ள முறையான வசதிகள் இல்லை. பாடசாலை மாணவர்களின் பள்ளிப் படிப்புக்கு அவசியமான
உபகரணங்கள், தஸ்தாவேஜூகள் இல்லை. ஏன்! இது எனது வீடு – சொத்து என்பதை உறுதிப்படுத்துவதற்கு
காணி உறுதிப்பத்திரம் கூட இல்லை.
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத
அளவுக்கு வேதனையின் விளிம்பில் நிற்கும் இவர்கள் யார்?
எமது தொப்புல் கொடி உறவுகள் இல்லையா?
எம் கொள்கைவாத சொந்தங்கள் இல்லையா?
நாம் இருக்கும் போது எம் சொந்தங்கள்
நடுத்தெருவில் நாதியற்று நிற்க விடலாமா? இன்று அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நாளை உங்களுக்கும்
உங்கள் குடும்பத்திற்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அப்போது
எம் உள்ளத்தில் தோன்றுகிற வலி எப்படியிருக்கும்?
ஒரு அடியான் தனது சகோதரனுக்கு
உதவும் காலமெல்லாம் அல்லாங் அவ்வடியானுக்கு உதவிக் கொண்டேயிருப்பான் என்பது நபிகளாரின்
வாக்கு அல்லவா?
அன்பர்களே! ஈமானிய உறவுகளே!
மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும்
வார்த்தைகளால் மட்டுமன்றி எமது பொருளாலும், பணத்தாலும் நிரூபிக்க வேண்டிய கட்டத்தில்
நாம் உள்ளோம்.
300 க்கும் அதிகமான வீடுகள்,
60 க்கும் மேற்பட்ட கடைத் தொகுதிகள், எண்ணிலடங்கா வாகனங்கள் மற்றும் வகைதொகையற்ற எண்ணிக்கையில்
சேதங்கள் என்று எம் உறவுகள் அடைந்துள்ள பாதிப்பு பல கோடிகளுக்கு மேல்!
பாதிப்படைந்து எம் உதவிக்கரத்தை
எதிர்பார்த்து நிற்கும் எம் சொந்தங்களுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
தற்போது நிவாரண உதவிகளை பணமாகவும் பொருளாகவும் திறட்டிக் கொண்டிருக்கிறது.
1)அரிசி, சீனி, மா, பயறு பருப்பு
வகைகள், நூடில்ஸ், பால்மா, தேயிலை, பிஸ்கட், சமபோஷ போன்ற உலர் உணவு வகைகள்
2)சிறுவர் மற்றும் பெரியோருக்கான
வித்தியாசமான அளவுகளில் புத்தாடைகள், உள்ளாடைகள், போர்வைகள்.
3)நில விரிப்புகள், பாய்கள், தலையனைகள்,உள்ளிட்ட
அத்தியவசிய பொருட்கள்
4)பெனடோல், கிரைப் வோடர், டிடோல்,
சித்தாலேப பாம், உள்ளிட்ட முதலுதவிக்கான மருந்து வகைகள்.
இவை அவசரமாக ஆற்றப்பட வேண்டிய
பணிகளாகும். இப்பொருட்களை கொள்வனவு செய்யும் பணியில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தற்போது
முழு மூச்சாய் இறங்கியுள்ளது. நாளை அல்லது மறு நாள் இந்நிவாரண பொருட்களுடன் முதல் கட்ட
பயணம் பாதிக்கப் பட்டோரை தேடி செல்லவுள்ளது.
மறுமையின் வெற்றியை ஆசிக்கும்
ஒவ்வொருவரும் இம்மகத்தான மனித நேயப்பணிக்கு உங்களால் முடிந்த பொருள் மற்றும் பண உதவிகளை
தாராளமாக தந்துதவுமாறு கேட்கிறோம்.
முதல் கட்ட பயணத்தை தொடர்ந்து
கட்டம் கட்டமான நிவாரண உதவிப் பணிகள் செய்யப்படவுள்ளதோடு, பாதிக்கப்பட்ட அன்பர்களுக்கான
வீட்டு புணர்நிர்மான பணிகளையும் ஆற்ற வேண்டிய தேவையுள்ளது. இவை பல கோடிகளை வேண்டி நிற்கும்
பணி. எம் ஈமானிய உறவுகள் ஒன்றாக கைகோர்த்தால் 1000 கோடிகளே ஆனாலும் ஒன்று சேர்ப்பது
பெரிய விடயமல்ல என்பதே எம் ஆழமான நம்பிக்கை.
உங்கள் உதவிகளை பணமாக தர விரும்புவோர்
Sri Lanka Thawheed Jamath
Hatton National Bank
Maradana Branch
Acc.No: 108010104971
Telephone Number : 0779481767
என்ற வங்கிக் கணக்கில் இன்றே வைப்புச்
செய்ய முடியும். பணம் வைப்பிலிட்டவர்கள் 0779481767 என்ற
கையடக்க தொலை பேசியுடன் தொடர்பை ஏற்படுத்தி எவ்வளவு தொகை, எத்தனையாம் திகதி
வைப்பிலிடப்பட்டது, வைப்புலிட்டவரின் மின்னஞ்சல் அல்லது வீட்டு முகவரி என்பவற்றை
தவறாது குறிப்பிடவும். நீங்கள் தந்த பணம் எம் கரம் சேர்ந்தது என்பதனை
உறுதிப்படுத்தி பணத்தை பெற்றுக் கொண்டதற்கான ஜமாஅத்தின் உத்தியோக பூர்வ பற்றுச்
சீட்டு உங்கள் முகவரிக்கு இன்ஷா அல்லாஹ் அனுப்பி வைக்கப்படும்.
பொருளாக
உதவ விரும்புவோர்
Sri Lanka Thowheed Jamath
241A, Sri Saddharma Mawatha,
Maligawatte
Colombo – 10
என்ற
இடத்திலுள்ள எமது தலைமை காரியாலயத்திற்கு சமூகம் தந்து நேரடியாகவே உதவ முடியும்.
நன்மைகளை அள்ளித் தரும் இந்நற்பணிக்கு உங்கள்
பொருளாதாரத்திலிருந்து அள்ளி வழங்குமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
எம்.டீ.எம்.பர்ஸான்
துணைத்தலைவர் மற்றும் வசூல் பிரதிநிதி
0779481767
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
Post a Comment