எகிப்து நாட்டில் கடந்த வருடம் அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்ட பின்னர் இந்த ஆண்டு மே மாத இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி அப்டால் பட்டா எல் சிசி அதிபர் பதவி ஏற்றார்.
அதனைத்தொடர்ந்து இன்று அந்நாட்டின் புதிய அமைச்சரவையும் அதிபரின் கீழ் பதவிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சி தலைநகர் கெய்ரோவில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று அதிகாலை நடைபெற்றது.
கடந்த ஐந்து மாதங்களாக இடைக்காலப் பிரதமர் பொறுப்பை வகித்த பிரதமர் இப்ராஹீம் மெஹ்லெபே மீண்டும் பிரதமர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். நான்கு பெண்களுடன் பல தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட மொத்தம் 34 அமைச்சர்கள் இந்த புதிய அமைச்சரவையில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 13 பேர் புதியவர்கள் ஆவர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முதலீட்டு அமைச்சர் அஷ்ரப் சல்மான், சர்வதேச கூட்டுறவு அமைச்சர் நக்லா எல் அஹ்வனி உட்பட பிற அமைச்சர்கள் பிரதமரைத் தொடர்ந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற மற்ற பெரும்பாலான முக்கிய துறைகளின் அமைச்சர்கள் தொடர்ந்து அந்தத் துறைகளிலேயே நீடித்திருக்க குறிப்பிட்ட அளவிலேயே பழைய அமைச்சரவை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அரசு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Post a Comment