(VIDEO) செல்லக்கதிர்காமம் ஈஸ்வர தேவாலய பிரதான பூசகர் வெட்டிக் கொலை! / கொழும்பில் 1000 கிலோ குண்டுகள், ஆயுதக்குவியல்: படைத்தரப்பை அதிர வைத்துள்ள தகவல்! (இணைப்பு-2)

 

கொழும்பில் 1000 கிலோ குண்டுகள், ஆயுதக்குவியல்: படைத்தரப்பை அதிர வைத்துள்ள தகவல்! (இணைப்பு-2)-
விடுதலைப் புலிகளால் கொண்டு வரப்பட்ட தலா 500 கிலோ எடையுள்ள இரண்டு பாரிய குண்டுகளும், பெருமளவு ஆயுதங்களும் இன்னமும் கொழும்பு நகரப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் சிறிலங்கா பாதுகாப்புத் தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே இந்த ஆயுதங்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தக் கூடிய பாரிய குண்டுகளையும், ஆயுதங்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.
போர் நடந்த காலத்தில், கொழும்புக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு தொன் எடையுள்ள குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பற்றிய விபரங்கள் தமக்குத் தெரியும் என்று அதனைக் கடத்தி வந்தவரான, விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் ராஜேந்தரகுமார் வெலிக்கடைச் சிறை அதிகாரியிடம் எழுத்துமூலம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் முன் நிறுத்தப்பட்டார். குண்டுகளை கண்டுபிடிப்பதற்கு வசதியாக அவரை மூன்று நாட்கள் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பிரசன்ன டி அல்விஸ் நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.
இதற்கமைய குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கண்டறிய மூன்று நாட்கள் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ராஜேந்திரகுமாரை ஒப்படைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கொழும்பை அண்டிய பகுதியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்த பாரிய ஆயுதக்குவியலைக் கண்டுபிடிக்க சிறிலங்கா காவல்துறையினர் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆயுதங்களில் தலா 500 கிலோ எடை கொண்ட இரண்டு குண்டுகள், ஏழு ரி-56 துப்பாக்கிகள், ஒன்பது தன்னியக்க கைத்துப்பாக்கிகள், மூன்று இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ரி-56 துப்பாக்கிகளுக்கான 3500 ரவைகள், 10 மில்லியன் ரூபா பெறுமதியான சொக்கலேற் பொதி, 8 மில்லியன் ரூபா பணம் என்பனவே மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆயுதக்கடத்தலில் ராஜேந்திரகுமார் தொடர்புபட்டுள்ளதாலும், அவர் புலிகளின் புலனாய்வு பிரிவு உறுப்பினராக செயற்பட்டுள்ளதாலும், அவருக்கு இந்த ஆயுதக்குவியல் எங்குள்ளது என்று தௌவாகத் தெரியும் என்று தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ராஜேந்திரகுமார் மீது அத்தனகல மற்றும் கம்பகா நீதிமன்றங்களில் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரை சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைத்துச் செல்ல நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
செல்லக்கதிர்காமம் ஈஸ்வர தேவாலய பிரதான பூசகர் வெட்டிக்கொலை!-
செல்லக்கதிர்காமம் – வல்லகுகாவ – ஈஸ்வர தேவாலயத்தின் பிரதான பூசகர் இனந்தெரியாத நபர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆலயத்திற்கு பின்புறமாக வைத்து இவர் கொலை செய்யப்படட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொலை குறித்து இன்று காலை 7 மணியளவில் செல்லக்கதிர்காமம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 70 வயதுடைய ராஜபக்ஷ முதியன்சலாகே பிரேமதாஸ என்ற பூசகரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger