நான்கு ஏக்கர் கஞ்சா செய்கை அழிப்பு / சிசிலி கொத்தலாவலயின் சொத்து பறிமுதல் / மண்மேடு சரிந்து வீழ்ந்தது / மாகாணசபை அதிகாரப் பகிர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடல்


 

சிசிலி கொத்தலாவலயின் சொத்து பறிமுதல்-
கோல்டன் கீ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சிசிலி கொத்தலாவலவின் 50 கோடி ரூபா பெறுமதியான சொத்து அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
வைப்பாளர்களுக்கு பணம் செலுத்தும் நோக்கில் இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள காணியொன்றே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
கோல்டன் கீ நிறுவனத்தை மூடியதனால் அதில் பணத்தை வைப்புச் செய்தவர்கள் எதிர்நோக்கிய நட்டத்தை ஈடு செய்ய இந்த சொத்துக்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
செலிங்கோ குழும நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலயின் மனைவியான சிசிலி கொத்தலாவல தற்போது லண்டனில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவருக்கு பிரித்தானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. சிசிலி கொத்தலாவல இன்டர் போலினால் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாகாணசபை அதிகாரப் பகிர்வுகள் குறித்து விசேட கலந்துரையாடல்-
மாகாணசபைகளின் அதிகாரங்களை சீரமைப்பது தொடர்பில் நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள சட்ட மூலம் தொடர்பில், அரசாங்கம், ஜாதிக ஹெல உறுமய விசேட கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.
இந்த சட்ட மூலத்தை நாளைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அரசாங்க தரப்பு உறுப்பினர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, 13ம் திருத்தச் சட்டத்தின் இரண்டு சரத்துக்கள் சீர்த்திருத்தத்துக்கு உட்படுத்தப்படவுள்ளன.
மாகாண சபைகள் சட்ட மூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்த அனைத்து மாகாண சபைகளினதும் ஆதரவு காணப்பட வேண்டும் என்ற சரத்துக்கு பதிலாக, பெரும்பான்மையான மாகாண சபைகளின் ஆதரவுடன் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற சரத்து பிரதியிடப்படவுள்ளது.
அத்துடன், 2 அல்லது 3 மாகாண சபைகளை இணைந்து ஒரே மாகாண சபையாக கொண்டு செல்லும் முறைமையும் நீக்கப்படவுள்ளது.
எனினும் 13ம் திருத்தச் சட்டத்தை நீக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இது தொடர்பில் கட்சிகள் வெள்வேறு நிலைப்பாடுகளில் உள்ள நிலையில், இது தொடர்பில் நீதிமன்றத்தின் ஆலோசனை கேட்கவிருப்பதாக ஜனாதிபதி நேற்று தெரிவித்திருந்தார்.
நான்கு ஏக்கர் கஞ்சா செய்கை அழிப்பு-
லுணுகம்வெஹர தேசிய சரணாலயத்தின் தங்கஸ்ஸார பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை லுணுகம்வெஹர பொலிஸாரினால் நேற்று அழிக்கப்பட்டுள்ளது.
கிரிந்தி ஓயாவிற்கு அருகிலுள்ள நிலப்பரப்பிலேயே கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
லுணுகம்வெஹர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கஞ்சா செய்கையை அழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அதிகார சபைக் கட்டடம் அருகில் மண்மேடு சரிந்து வீழ்ந்தது-
கண்டி, போகம்பர பகுதியில் எஹலேபொல குமாரிஹாமி வீதியிலுள்ள மத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை கட்டடத்திற்கு அருகில் இன்றுகாலை 7 மணியளவில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
சுமார் 75 அடி உயரத்திலுள்ள மண்மேட்டின் ஒரு பகுதியே சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
இந்த அனர்த்தத்தினால் கட்டடத்திற்கும் அதன் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger