அல்லாஹ்வின் உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமான இறை நிந்தனை உலக வரலாற்றில் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றுள்ளது என பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய, வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக் குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்கூடிய, அச்சுறுத்தல் செயற்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த வகையில் தமது கையெழுத்துக்களை இட்டு அந்நாட்டிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை பிரித்தானியாவிலுள்ள SLMDI-UK எனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு தற்போது மேற்கொண்டு வருகின்றது. பிரித்தானியாவிலுள்ள சகல ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் எதிர்வரும் 19.04.2013ம் திகதி நடைபெறவுள்ள ஜும்ஆத் தொழுகையின் பின் இக்கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் இஸ்ஸடீன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
´தற்போது இலங்கையில் தலைதூக்கியிருக்கும் இந்த இனவாத – மதவாதச் செயற்பாடுகளினால் உள்நாட்டிலும், சர்வதேச நாடுகளிலும் இலங்கை அரசுக்கும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளையும், சட்டத்தையும் பேணுகின்ற விடயத்திலும் பலத்த சவால்களும், கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களின் சார்பில் எமது அமைப்பும் அரசாங்கத்திற்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.
நாட்டின் நிறைவேற்று அதிகாரத்திலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக இவ்வாறான குழுக்களின் முரட்டுத்தனமான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முன்வர வேண்டும் என பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகமானது இந்நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள், ஜமாஅத்தார்கள் மற்றும் அமைப்புகள் சார்பாகவும் ஜனாதிபதியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
அனுராதபுரம் சியாரம் உடைப்புச் சம்பவம் தொடக்கம் தெமடகொட பள்ளிவாசலுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் வரை இடம்பெற்றுள்ள பல்வேறு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்டவர்கள் மிகத் தெளிவாக ஆடையாளம் காணக்கூடிய நிலையில் இவ்வாறான அச்சுறுத்தும் செயற்பாடுகளையும், பேரணிகளையும், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கiளையும், இனத்துவேசப் பிரச்சாரக் கூட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் அவர்களுக்கு எதிராக எமது நாட்டின் அரசியலமைப்பிலும், சர்வதேச மனித உரிமைகள் சாசனத்திலும் விதந்துரைக்கப்பட்டுள்ள சட்டத்தையும், அடிப்படை மனித உரிமைகளையும் நிலை நாட்டக்கூடிய வகையில் ஸ்ரீலங்கா பொலிஸாரும், பாதுகாப்புத் தரப்பினரும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது கைகட்டிய நிலையில் தொடர்ந்தும் இருந்து வருவதானது கவலைக்கும், கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.
மாத்திரமன்றி, பொலிஸாரும், பாதுகாப்புத் தரப்பினரும் இவ்வாறு தமது கைகளைக் கட்டிக்கொண்ட நிலையில் இதுவரையிலும் நடந்துள்ள ஒவ்வொரு சம்பவங்களின்போதும் பார்வையாளர்களாக இருந்து வருவதானது, மேற்குறித்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் சீருடை அணியாத பொலிஸாராகவும், பௌத்த மதத்தின் பாதுகாவலர்களாகவும் செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ளதா? என்ற கேள்வியினையும் சர்வதேச சமூகத்தில் எழச் செய்துள்ளது.
உலக வரலாற்றில் அல்லாஹ்வின் (இறைவனின்) உருவ பொம்மையொன்றை தெருக்களில் கட்டி இழுத்து வந்து கேவலப்படுத்திய மிகக் கொடூரமானதும், கீழ்த்தரமானதுமான இறை நிந்தனையானது, இலங்கையில் இன்றைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திலேயே முதல் தடவையாக இடம்பெற்றிருப்பது எமது நாட்டின் வரலாற்றுப் பக்கங்களில் என்றுமே அழிக்க முடியாத ஒரு கரும் பதிவாகும்.
இது மட்டுமன்றி, பல்வேறு சமயங்களையும் பின்பற்றியவர்களாக இறை நம்பிக்கையுடன் உலகெங்கும் வாழுகின்ற அனைத்து மக்களின் உள்ளத்தையும் பெரிதும் புண்படுத்திய சம்பவமாகவும் கருதப்படுகின்றது.
எனவே, மேற்குறிப்பிட்ட குழுவினர்களால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்துவிதமான அச்சுறுத்தும், அவமானப்படுத்தும்; செயற்பாடுகளையும் நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பொலிஸாரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் கொண்டு உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு நாம் கோருவதுடன், அதனை மீறிச் செயற்படும் எவருக்கும் சட்ட ரீதியான தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொலிஸாரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் பணிக்க வேண்டுமெனவும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
நமது ஸ்ரீலங்கா தாயகத்தில் எமது முஸ்லிம் சமூகத்திற்கும், சமய நிறுவனங்களுக்கும் எதிராக பொது பல சேனா, சிங்கள ஜாதிக ராவய, ராவண பலகாய, வீர விதான போன்ற பலதரப்பட்ட பௌத்த தீவிரவாதக் குழுவினர்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு அச்சுறுத்தும், அவமதிக்கும், ஆத்திரமூட்டும் சம்பவங்களைப் பற்றி பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அனைவரும் நன்கறிந்துள்ளதுடன் கவலையும் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் எமது சத்திய மார்க்கத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும், மத நல்லிணக்கத்திற்கும், இனங்களின் ஐக்கியத்திற்குமான காத்திரமான பங்களிப்புக்களை நாமும் வழங்க வேண்டியது அவசியமாகும்.
இதனடிப்படையில், எமது இஸ்லாம் மார்க்கத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் மாத்திரமல்லாது எமது தாயகத்தில் வாழுகின்ற ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவுள்ள இக்குழுக்களுக்கும், இவர்களின் எல்லை மீறிய அடாவடித்தனமான செயற்பாடுகளுக்கும் எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது அமைதிப் போக்கைக் கடைப்பிடித்து வரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான நமது வலுவான கண்டனங்களையும், அழுத்தங்களையும் தெரிவிக்க வேண்டியதும் எமது தலையாய கடமையாகும்.
அந்த வகையில், இம்மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03:00 மணி தொடக்கம் இரவு 08:00 மணிவரை St.Wilfrid´s School, Old u;osham Road, Crawley, West Sussex, Ru;11 8PG எனும் இடத்தில் எமது SLMDI UK அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெறவுள்ள ´இலங்கையின் அண்மைய மதப் பிணக்குகளைப் புரிந்து கொள்ளலும், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தலும்´ எனும் தலைப்பிலான திறந்த உரையாடல் அமர்வுக்கு வருகை தரவுள்ள பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் மூலமாக பிரித்தானியாவில் பல்வேறு மாநிலங்களிலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்களான நாம் எமது ஒட்டுமொத்தமாக கூட்டுக் கண்டனத்தையும், கோரிக்கையையும் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஜனநாயக வழியில் தெரிவிப்பது பொருத்தமானதெனத் தீர்மானித்துள்ளோம்.
அவ்வாறு உயர்ஸ்தானிகர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கண்டனத்தினதும், எமது கோரிக்கையினதும் பிரதிகள் பிரித்தானியாவிலுள்ள அனைத்து ஜும்ஆப்பள்ளிவாசல்களுக்கும் எமது அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் 19.04.2013ம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவிலுள்ள பள்ளிவாசல்களில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அங்கு சமூகமளிக்கும் நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் விரிவாகத் தெரியப்படுத்திய பின்னர் அவர்களின் கையொப்பங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏக காலத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம்கள் தமது எதிர்ப்பினைக் காட்டுவதற்காக கடந்த 05.04.2013ம் திகதி இங்குள்ள இலங்கைத் உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றைச் செய்ததாகவும் எமக்குத் தெரிய வந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எமது அமைப்புக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதையும் நாம் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக ´ஜிஹாத்´ செய்யவும் தயாராக இருப்பதாக சுலோகங்களை ஏந்தி குரலெழுப்பியதாகவும் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாக எமது இஸ்லாமிய மார்க்கமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் எமக்கு வழிகாட்டி வருகின்றவாறு நாம் பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்குமே இன்னமும் முக்கியத்துவம் அளித்து எமது மார்க்கத் தலைமைத்துவத்திற்கும் கட்டுப்பட்டவர்களாகவே இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றோம்.
தீவிரவாதச் செயற்பாடுகளானது எந்த வடிவில் யார் மூலம் வெளியானாலும் அதனை வன்மையாக எதிர்க்கும் எமது அமைப்புக்கும், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்களும் பதிலுக்கு தீவிரவாதச் செயற்பாடுகளைக் கையிலெடுப்பதில் எப்போதும் உடன்பாடு கிடையாது.
நாம் எமது எதிர்ப்புக்களையும், கண்டனங்களையும் இலங்கை அரசுக்கு ஜனநாயக வழியிலேயே இதுவரை தெரிவித்து வந்துள்ளதோடு இப்போதும் அவ்வழியிலேயே நாம் செயற்பட்டுக் கொண்டும் இருக்கின்றோம். தொடக்கத்தில் எமது அமைப்பினால் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிக்கு கண்டனத்தையும், எமது கோரிக்கையையும் தெரிவித்தோம்.
இப்போது பிரித்தானியாவிலுள்ள அனைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம்களினதும் எதிர்ப்பையும், கண்டனத்தையும், வேண்டுகோளையும் முன்வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இதன் பின்னரும் நிலைமை இவ்வாறே தொடருமாயின் நாமும் பகிரங்கமான ஆர்ப்பாட்டங்களை ஜனநாயக வழியிலும், நாகரீகமான முறையிலும் இந்நாட்டில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுப்போம்.
இஸ்லாத்தில் ´ஜிஹாத்´ என்பது மிகவும் புனிதமான, நேரடியாகச் சுவனத்திற்குச் செல்லக்கூடிய ஒரு வழியாகும். அதனை பொறுப்பற்ற வகையில் உலமாக்களின் வழிகாட்டலின்றி முன்னெடுப்பதை நாம் வன்மையாக ஆட்சேபிக்கின்றோம். இங்குள்ள புலம்பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களை எமது SLMDI-UK அமைப்பானது ஒருபோதும் பிழையாக வழிநடாத்திச் செல்ல முற்படாது என்பதையும் இத்தருணத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே எதிர்வரும் 19.04.2013ம் திகதி பிரித்தானியாவிலுள்ள அனைத்து ஸ்ரீலங்கா புலம்பெயர் முஸ்லிம் சகோதரர்களும் தத்தமது பகுதிகளிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தூய எண்ணத்தோடு எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்குரிய கௌரவத்தை அந்நாட்டின் ஆட்சியாளர்கள் பக்கச்சர்பற்ற முறையில் சம நீதியாக வழங்கும் வல்லமையை அளிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக தங்களின் பெறுமதியான கையெழுத்துக்களை உரிய பத்திரங்களில் இட்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன்´ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment